×

கண்மாய், குளங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்படுமா?: ஆண்டிபட்டி விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் கண்மாய் குளங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. அவற்றை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பல இடங்கள் வருவாய் ஆவணங்களில் இல்லை. ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்தது.

அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் அந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது.

தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள போடி, கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. மாவட்டத்தில் ஏராளமான கண்மாய் மற்றும் குளங்கள் உள்ளன. மழை காலங்களில் பெய்யும் தண்ணீரை இந்த கண்மாய் குளங்களில் தேக்கி சேமித்து வைத்து அதனை விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள கண்மாய் குளங்களில் மற்றும் தண்ணீர் செல்லும் வரத்து கால்வாய்கள் ஆகிய இடங்களில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் முளைத்து பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது. கண்மாய் குளங்களில் கரைப்பகுதி மற்றும் உள்பகுதி ஆகிய இடங்களிலும் மரங்களாக வளர்ந்து கிடக்கிறது.இதனால் கண்மாய் குளங்களை இயந்திரங்கள் மூலம் தூர்வாருவதில் சிக்கல் ஏற்படுகிறது. போதிய அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் போகும் நிலை இருந்து வருகிறது. இந்த மரத்தின் வேர்கள் அதிக ஆழத்திற்கு சென்று தண்ணீரை உறிஞ்சி விடுவதால் நிலத்தடி நீரும் பாதிக்கிறது. எனவே இந்த மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ‘‘கடந்த காலங்களில் சீமை கருவேல மரங்களை அகற்ற பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். அரசும் இந்த வகை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அப்படியே தொய்வு ஏற்பட்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்த சீமை கருவேல மரங்களால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது பெய்யும் மழை தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை காரணம் கண்மாய் குளங்களில் உள்பகுதிகளும் அதாவது தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியிலும் முளைத்து ஆக்கிரமித்து விட்டது இதனால் போதிய தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை.

மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரும் மாசு பட்டு விடுகிறது. இதனால் குளிக்க பயன்படுத்த முடியவில்லை. அதேபோன்று கால்வாய் பகுதிகளில் மரங்கள் முளைத்து தண்ணீர் செல்லும் பாதையை அடைத்து விடுகிறது. இதனால் கண்மாய் குளங்கள் பெருகுவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு சீமைகருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜேசிபி இயந்திரம் மூலம் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். பின்னர் சிறு கன்றுகளாக முளைத்து வரும்போது 100 நாள் திட்ட பணியாளர்களைக் கொண்டு அவற்றை அகற்ற வேண்டும். இப்படி செய்தால் சீமை கருவேல மரங்களை முற்றிலும் ஒழித்து விட முடியும்,’’ என்றனர்.

The post கண்மாய், குளங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்படுமா?: ஆண்டிபட்டி விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kammai ,Antipatti ,Kanmai ,Theni district ,
× RELATED சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில்...